முதன்மை உள்ளடக்கத்துக்குச் செல்லவும்

கொள்ளைநோய்க்கு ஒரு கிறிஸ்தவரின் பதில் என்ன?

Open old book

கட்டுப்படுத்த முடியாத ஒரு வைரஸ், பெரும் புயலைப் போலக் கண்டங்களைக் கடந்து பரவி, நம்மைச் சுற்றியுள்ள மக்களைத் தொற்றிக்கொண்டிருக்கிறது. நம்மில் சிலருக்கு, அது நம் வேலையையும் நாம் நேசித்தவர்களின் உயிரையும் பறித்துக்கொள்கிறது. சிகிச்சையே இல்லாத ஒரு வைரஸுக்கு முன்பாக நாம் நம்பிக்கையற்றவர்களாக உணர்கிறோம். புயல்காற்றின் நடுவே ஒரு சிறிய படகில் தத்தளிப்பதுபோல் உணர்கிறோம்.

37அப்பொழுது பலத்த புயல்காற்று உண்டாகி, அலைகள் படகின்மேல் மோதின; படகு மூழ்கத்தொடங்கியது. 38இயேசுவோ படகின் பின்பகுதியில் ஒரு தலையணை வைத்து தூங்கிக்கொண்டிருந்தார். சீடர்கள் அவரை எழுப்பி அவரிடம், “போதகரே! நாங்கள் மூழ்கப்போவதைப் பற்றி, உமக்குக் கவலையில்லையா!” எனக் கேட்டார்கள்.
39இயேசு விழித்தெழுந்து, காற்றைக் கடிந்துகொண்டார்; அலைகளிடம், “அமைதியாயிரு! இரையாதே” என்றார். அப்பொழுது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டாயிற்று.
40இயேசு தமது சீடர்களிடம், “நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்றார்.
( மாற்கு 4:37-40 )

இந்த உலகில் நாம் பெறும் அனுபவத்தின் அடிப்படையில் நம் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது நமக்கு இயல்பானது. நாம் எதிர்பார்க்கிறபடியே காரியங்கள் நடக்கும்போது, நாம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். சிறிய ஒரு பிரச்சினை நம் வழியில் வந்தால், அதைப் புறக்கணித்துவிட்டு முன்னேறிச் செல்ல முயல்கிறோம். வசதியான வாழ்க்கையைத் தரும் தொழில் வளர்ச்சியோடும், காரியங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை விளக்கி எல்லா நோய்களுக்கும் தடுப்பூசிகளை உருவாக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளோடும் நம் நம்பிக்கை வளர்ந்துகொண்டே போகிறது. ஆனாலும், நம் விசுவாசத்தின் அஸ்திபாரம் மிகவும் பலவீனமானது; வழக்கத்துக்கு மாறான ஏதாவது நடக்கும்போது அது சீக்கிரமாகச் சரிந்துவிடுகிறது. பிதாவாகிய நம் தேவனிடமிருந்து நாம் பெற்ற வாக்குத்தத்தத்தைப் பார்ப்போம்.

2உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், இந்த ஆசீர்வாதங்களெல்லாம் உங்கள்மேல் வந்து உங்களோடிருக்கும்:
3நீங்கள் பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், கிராமத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
4உங்கள் கர்ப்பத்தின் கனி ஆசீர்வதிக்கப்படும், உங்கள் நாட்டின் பயிர்வகையும், உங்கள் வளர்ப்பு மிருகங்களான மாட்டு மந்தையின் கன்றுகளும், செம்மறியாட்டு மந்தையின் குட்டிகளும் ஆசீர்வதிக்கப்படும்.
5உங்கள் அறுவடையின் கூடையும், மா பிசையும் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்படும்.
6நீங்கள் பட்டணத்தின் உள்ளே வரும்போதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். பட்டணத்தின் வெளியே போகும்போதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
7உங்களுக்கு எதிராக வரும் பகைவர்கள் உங்களுக்கு முன்பாகத் தோல்வியடையும்படி, யெகோவா செய்வார். அவர்கள் ஒரு திசையிலிருந்து உங்களை எதிர்த்து வருவார்கள். ஆனால் உங்களைவிட்டு ஏழு திசைகளில் சிதறி ஓடுவார்கள்.
8உங்கள் தானியக் களஞ்சியங்களின்மேலும், நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லாவற்றின்மேலும் யெகோவா ஆசீர்வாதத்தை அனுப்புவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாட்டில் உங்களை ஆசீர்வதிப்பார்.
11யெகோவா உங்களுக்கு நிறைவான செழிப்பை வழங்குவார். உங்களுக்குக் கொடுப்பதாக உங்கள் முற்பிதாக்களுக்கு அவர் வாக்குக்கொடுத்த நாட்டில், உங்கள் கர்ப்பத்தின் கனியையும், உங்கள் வளர்ப்பு மிருகங்களின் இளமையானவற்றையும், உங்கள் நிலத்தின் விளைச்சலையும் நிறைவாகச் செழிக்கப்பண்ணுவார்.
12யெகோவா தமது நிறைவான களஞ்சியமான வானத்தைத் திறந்து உங்கள் நாட்டிலே பருவகாலத்தில் மழையை அனுப்புவார். உங்கள் கைவேலைகள் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் அநேக நாட்டவர்களுக்குக் கடன்கொடுப்பீர்கள். ஆனால் ஒருவரிடமும் கடன் வாங்கமாட்டீர்கள்.
13யெகோவா உங்களைத் தலையாக்குவார்; வாலாக்கமாட்டார். இந்த நாளில் நான் உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கவனித்து அவற்றைக் கவனமாகப் பின்பற்றினால், நீங்கள் எப்பொழுதும் மேன்மையாய் இருப்பீர்கள். கீழாயாகமாட்டீர்கள்.
( உபாகமம் 28:2,3,4,5,6,7,8,11,12,13 )

தேவனுக்கும் அவருடைய கட்டளைகளுக்கும் முழுமையாகக் கீழ்ப்படிந்து இந்த வாழ்க்கையை வாழ்வது நமக்கு இயல்பானதல்ல. நம் வாழ்க்கை பிரச்சினையிலிருந்து விடுபட்டவுடனே, மீண்டும் மீண்டும் நம் பொல்லாத வழிகளிலேயே செல்கிறோம்...

15நான் இறைவாக்கு உரைக்கும் என்னுடைய எல்லா ஊழியக்காரரையும் உங்களிடம் திரும்பத்திரும்ப அனுப்பினேன். அவர்கள் உங்களிடம், “நீங்கள் ஒவ்வொருவனும் தன்தன் தீமையான வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் செயல்களைச் சீர்படுத்துங்கள்; அந்நிய தெய்வங்களை வழிபடுவதற்காக அவைகளைப் பின்பற்றவேண்டாம். அப்பொழுது நான் உங்களுக்கும் உங்கள் தந்தையர்களுக்கும் கொடுத்த நாட்டில் வாழ்வீர்கள்” என்று சொன்னார்கள். ஆனால் நீங்களோ, என் வார்த்தைகளைக் கவனிக்கவுமில்லை, கேட்கவுமில்லை.
( எரேமியா 35:15 )

பயத்திலும் விசுவாசக் குறைவிலும் நம்மை நாமே காண்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக, மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் அவருடைய ஆசீர்வாதங்களை இழந்துவந்திருக்கிறார்கள். தேவனுடைய கட்டளைகளின் அஸ்திபாரத்திலிருந்து அன்பை நாம் உதறித் தள்ளிவிட்டு, வெளித்தோற்றமான, சம்பிரதாயமான கீழ்ப்படிதலோடு கூடிய வறண்ட வார்த்தைகளை மட்டுமே விட்டுவைத்தோம். இவை அனைத்தும், சொல்லப்பட்டபடியே, நம்மை ஒரு பயத்தின் இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன…

20யெகோவா உங்கள்மேல் சாபங்களை அனுப்புவார், உங்களுடைய கையின் வேலைகள் எல்லாவற்றின்மேலும் கலகத்தையும், கண்டனத்தையும் அனுப்புவார். நீங்கள் அவரைக் கைவிட்ட அந்த தீமையான செயலின் நிமித்தம் திடீரென அழிந்து பாழாய்போகும் வரைக்கும், இவற்றை உங்கள்மேல் அனுப்புவார்.
22யெகோவா உங்களை உடலுருக்கும் நோயினாலும், காய்ச்சலினாலும், வீக்கத்தினாலும், கொப்பளிக்கும் வெப்பத்தினாலும், வறட்சியினாலும்28:22 அல்லது பட்டயத்தாலும், தாவர நோயினாலும், விஷப்பனியினாலும் தாக்குவார். நீங்கள் அழிந்துபோகும்வரை அவை உங்களை வாதிக்கும்.
( உபாகமம் 28:20,22 )

தேவனுடைய கோபம் உண்மையிலேயே பயங்கரமானதுதான். ஆனால் இப்படிப்பட்ட கடுமையான காரியங்களைச் செய்ததற்காக நம் பரலோகப் பிதாவை நியாயந்தீர்க்க அவசரப்படுவதற்கு முன், ஒரு மனிதனைச் சாவிலிருந்து காப்பாற்றுவதற்காகத் தொற்றுக்குள்ளான காலை வெட்டி எடுக்கும் ஒரு மருத்துவரைக் கற்பனை செய்து பார்ப்போம். காணப்படுகிற காரியங்களில் கவனம் செலுத்தி, நம் தேவனுடைய அன்பையும் நம்மை இரட்சிக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தையும் புறக்கணிப்பது நமக்கு இயல்பானது. நம் பிள்ளை நம்முடைய கோபத்தையும் முதுகில் விழுந்த வலிமிகுந்த ஓர் அடியையும் நினைவில் வைத்திருக்கும்; ஆனால் அது ஆபத்தான ஒரு செங்குத்துப் பாறையிலிருந்து விழாமல் தன்னை எப்படிக் காப்பாற்றியது என்பதை எளிதில் மறந்துவிடும். பூமிக்குரியவற்றை மட்டுமே காணும் நாமோ, தேவனுடைய கோபம் எதிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது என்பதைக்கூடக் காண்பதில்லை.

நாம் உண்மையோடு அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் காண்பவற்றைக் குறித்துப் பயப்படாமல், மாறாக நம் விசுவாசத்திலிருந்து உறுதியைப் பெற வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

18எனவே நாங்கள் காணப்படுபவைகளிலல்ல, காணப்படாதவைகளிலேயே கண்நோக்கமாயிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை.
( 2 கொரிந்தியர் 4:18 )

நீங்கள் உயிரை இழக்கும் அபாயத்தில் இருந்தாலும் சரி, ஆரோக்கியத்தின் உச்சத்தில் இருந்தாலும் சரி, நமக்கு நேரிடக்கூடிய மிக மோசமான காரியமாக மரணமே கருதப்படுகிறது. ஆனால் அது உண்மையா? ஒரு மனிதனைப் பற்றி நாம் காணும் கடைசிக் காரியம் மரணமே. மரணம் காணப்படாதவற்றுக்கும் அறியப்படாதவற்றுக்கும் உரிய கதவை நமக்குத் திறக்கிறது.

நம் வாழ்க்கையிலோ அதற்குப் பின்போ உள்ள அறியப்படாதவை, நம் பயத்தினாலோ அல்லது நம் விசுவாசத்தினாலோ ஆளப்படுகின்றன. பயத்தின் இருளாலோ விசுவாசத்தின் வெளிச்சத்தாலோ நம்மைச் சூழ்ந்துகொள்ளலாம். இந்தப் பூமிக்குரிய வாழ்க்கையில் நாம் காண்கிறபடி, விசுவாசமுள்ள மக்கள் தாங்கள் செய்வதில் வெற்றி பெறுகிறார்கள். விசுவாசிக்கிறவர்களுக்கு மரணத்துக்குப் பின்னும் விசுவாசம் பாதையை ஒளிரச்செய்யும் என்பதில் சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை. இந்தப் பூமியில் உள்ளதைவிட மிகச் சிறந்த ஒரு வாழ்க்கைக்குச் செல்லும் பாதை அது.

16இறைவன் தமது ஒரே மகனை ஒப்புக்கொடுத்து அவரில் விசுவாசிக்கிற ஒருவரும் அழிந்து போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி இவ்வளவாய் உலகத்தினரை அன்புகூர்ந்தார்.
( யோவான் 3:16 )

இப்போது நாம் உயிரோடிருக்கிறோம். இப்போது நாம் வாழும் ஒவ்வொரு நிமிடத்துக்காகவும், பார்க்கவும் சுவாசிக்கவும், இந்த உலகில் ஒரு மாற்றத்தை உண்டாக்கவும் கிடைத்திருக்கும் திறனுக்காகவும் நம் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாம் நேசிப்பவர்களை இன்னும் நம்மால் பார்க்க முடியும்; அவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்று அவர்களிடம் சொல்ல முடியும்.

அன்பு பயத்தை மேற்கொண்டு, தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட நாம் உண்மையில் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. சரீர மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் கடந்து சென்றதன் மூலம், இயேசு கிறிஸ்து மரணத்தின் சங்கிலிகளை உடைத்து, இப்போது நமக்குள் வாசம்பண்ணக்கூடிய காணப்படாத உதவியாளராகிய பரிசுத்த ஆவியை நமக்குக் கொண்டுவந்தார்.

17அவரே சத்திய ஆவியானவர். இந்த உலகத்தினரால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர்கள் அவரைக் காணாமலும், அறியாமலும் இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ அவரை அறிந்திருக்கிறீர்கள். அவர் உங்களுடனேகூட இருக்கிறார்; மேலும் உங்களுக்குள்ளும் இருப்பார்.
( யோவான் 14:17 )

நாம் பெற்ற ஆவி பயமுள்ள ஆவி அல்ல; ஏனெனில் அது நம்மை நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது.

7ஏனெனில், இறைவன் நமக்குப் பயமும், கோழைத்தனமுமுள்ள ஆவியைக் கொடுக்கவில்லை. இறைவன் வல்லமை, அன்பு, தன்னடக்கம் ஆகியவற்றைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரையே கொடுத்திருக்கிறார்.
( 2 தீமோத்தேயு 1:7 )

இதிலிருந்து, நாம் பயத்தை உணர்ந்தால், அது தேவன் நமக்குக் கொடுத்த ஆவியினால் உண்டானதல்ல என்பதைக் காணலாம். நாம் பயத்தின் இருளில் நடந்தால், நம் தேவனாகிய கர்த்தர்மேல் உள்ள விசுவாசத்தின் வெளிச்சத்தை நாம் கொண்டுவரவில்லை.

12மீண்டும் இயேசு மக்களுடன் பேசத்தொடங்கி, “நானே உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் ஒருபோதும் இருளில் நடக்கமாட்டான். ஜீவ வெளிச்சம் அவர்களுடன் இருக்கும்” என்றார்.
( யோவான் 8:12 )

இப்போது, கொள்ளைநோயின் மையப்பகுதியில் நின்றுகொண்டிருக்கும் நீங்கள் எதைத் தெரிந்துகொள்வீர்கள் – பயத்தையா, விசுவாசத்தையா? பயம் நிறைந்த இந்த உலகின் இருளில் மற்றவர்கள் உங்களைப் பார்க்கும்போது, அவர்களால் உங்கள் வெளிச்சத்தைக் காண முடிகிறதா?

3நிச்சயமாகவே அவர் உன்னை
வேடனுடைய கண்ணியிலிருந்தும்,
கொன்றழிக்கும் கொள்ளைநோயிலிருந்தும் தப்புவிப்பார்.
4யெகோவா தமது சிறகுகளால் உன்னை மூடுவார்;
அவருடைய சிறகுகளின் கீழே நீ புகலிடம் காண்பாய்;
அவருடைய சத்தியம் உனது கேடயமும் கவசமுமாயிருக்கும்.
5நீ இரவின் பயங்கரத்திற்கும்,
பகலில் பறக்கும் அம்புக்கும் பயப்படாதிருப்பாய்.
6இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும்,
நடுப்பகலில் பாழாக்கும் கொடிய வாதைக்கும் நீ பயப்படாதிருப்பாய்.
7உன் பக்கத்தில் ஆயிரம்பேரும்,
உன் வலதுபக்கத்தில் பத்தாயிரம்பேரும் வீழ்ந்தாலும்,
அது உன்னை நெருங்காது.
( சங்கீதம் 91:3-7 )
9நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு தைரியமாயிரு. திகிலடையாதே; மனச்சோர்வடையாதே. ஏனெனில், நீ எங்கே சென்றாலும் உன் இறைவனாகிய யெகோவா உன்னுடனே இருப்பார்.”
( யோசுவா 1:9 )

நம் உலகில் எதுவும் காரணமின்றி நடப்பதில்லை. இந்தக் கொள்ளைநோய் நமக்கு என்ன கற்றுக்கொடுக்கும்? மனித உயிரை நாம் உண்மையிலேயே மதிக்கக் கற்றுக்கொள்வோமா? உண்மையான நட்பை மதித்து, நமக்குக் கிடைத்திருப்பவற்றுக்காக நன்றி தெரிவிக்க நம்மால் முடியுமா? இன்ஸ்டாகிராமில் இன்னும் அழகான படத்துக்காகவும் நம் யூடியூப் வீடியோக்களுக்கு இன்னும் அதிகமான சந்தாதாரர்களுக்காகவும் நடக்கும் அர்த்தமற்ற ஓட்டத்துக்கு இது முடிவுகட்டுமா? பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் நடக்கும் போர்களுக்கு இது முடிவுகட்டுமா? வருங்காலத் தலைமுறைகளுக்காக வானத்தை மீண்டும் நீலமாக்குமா? கடைசியாக, நம் கண்களிலிருந்து முக்காட்டை நீக்கி, நம் பிதா சிருஷ்டித்த உண்மையான உலகத்தை நம்மால் காண முடியுமா?

27சமாதானத்தை உங்களுக்கு கொடுத்துவிட்டுப் போகிறேன். என்னுடைய சமாதனத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் கொடுக்கிற இந்த சமாதானமோ உலகம் கொடுக்கும் சமாதானத்தைப் போன்றது அல்ல, ஆகையால் உங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்; பயப்படவும் வேண்டாம்.
( யோவான் 14:27 )
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)